அரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில், மிகப்பெரிய இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து இந்திய அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது. ரமலான் மாதம் இஸ்லாமியர்களால் புனிதமானதாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களுக்கான ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை கடைபிடிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாலையில் நோன்பு திறக்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த நோன்பு திறப்பு ஏற்பாட்டை, மிகப்பெரிய அளவில் செய்து இந்திய அறக்கட்டளை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பிசிடி ஹியூமனிட்டி என்ற அறக்கட்டளை நிறுவனர் ஜோகிந்தர் சிங் சலாரியா, துபாய் தொழிற்பூங்காவில் உள்ள தனது பெஹல் இன்டர்நேஷனல் நிறுவன வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ளார். இதில், நோன்பு திறப்பாளர்களுக்கு ஏழு வகையான சைவ உணவுகள் அடங்கிய பேக்கேஜை இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது. இடைவெளி எதுவும் இன்றி ஒரு கிமீ தூரத்துக்கு இந்த பேக்கேஜ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த வகையில் மிகப்பெரிய இப்தார் திறப்பு ஏற்பாடு என உலக கின்னஸ் சாதனையை இது படைத்துள்ளது என அரபு நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories: