கருத்து கணிப்புகள் உண்மை என்றால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு: கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர் பேட்டி

பெங்களூரு: கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகின்றன. காங்கிரஸ், மஜத கூட்டணி வேட்பாளர்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம். வாக்குப்பதிவுக்கு பிறகு வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறுவதாக கூறப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறைந்த இடங்களில் வெற்றி பெறுவதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற கருத்து கணிப்புகளை 100 சதவீதம் நம்ப முடியாது. அதே நேரம் கருத்து கணிப்புகள் தோல்வியாகவும் முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. ₹500, ₹ஆயிரம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் பல கோடி பேர் பாதிப்பு அடைந்தனர்.

பலர் உயிரிழந்தனர். பொதுமக்கள் இதை மறந்துவிடாத நிலையில் மக்களவை தேர்தலில் பாஜவுக்கு வாக்குகளே கிடைக்காது. இதுதான் உண்மையாகும். ஒருவேளை, கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது போல் பாஜவுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தால், உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்திருக்கவேண்டும். உண்மை நிலவரம் நன்றாக தெரிந்த காரணத்தினால் இதை கூறுகிறேன்.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதிருப்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைதி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அது கூட்டணி ஆட்சியை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: