மத்திய பிரதேச காங். அரசு பெரும்பான்மை நிரூபிக்க வலியுறுத்துகிறது பாஜ: கருத்துக்கணிப்பு வந்ததுமே ஆரம்பிச்சாச்சு

போபால்: மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என பாஜ வலியுறுத்தி உள்ளது. மக்களவை தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலானவற்றில் பாஜ கூட்டணி 280 - 300 இடங்களை கைப்பற்றி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசின் ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகத்தை பாஜ எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜவின் கோபால் பார்கவா நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். இதற்காக விரைவில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென கோரி, ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். பேரவையில் முக்கிய விவாதங்களை காங்கிரஸ் அரசு வேண்டுமென்றே தவிர்க்கிறது. பலவீனமான இந்த அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கூறுவது அரசை கவிழ்ப்பதற்காக செய்யும் உத்தி அல்ல. காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலைத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதால்தான்.இவ்வாறு அவர் கூறினார். 230 உறுப்பினர்களை கொண்ட மபி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜ 109 இடங்களிலும் வென்றது. ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவை என்ற நிலையில், பகுஜன் சமாஜ் (2 இடங்கள்), சமாஜ்வாடி (1), சுயேச்சைகள் (4) ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

‘ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறது பாஜ’

காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பாப்ரியா கூறுகையில், ‘‘மபி மக்கள் பாஜவை புறக்கணித்து, அவர்கள் வெளியேற வேண்டுமென தேர்தலில் வாக்களித்தனர். ஆனால், ஊழல் நடவடிக்கை மூலம் ஆட்சியை கவிழ்க்க இப்போது பாஜ சதி செய்கிறது. மபி மக்கள் காங்கிரசுக்கு அளித்த வாக்குகளின் மதிப்பை சீர்குலைக்க பாஜ முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார்.

Related Stories: