சட்ட பாதுகாப்பை நீட்டிக்க கோரி கொல்கத்தா மாஜி கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் வழங்கப்பட்ட 7 நாள் சட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் மீது சிபிஐ பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்ற ராஜிவ் குமார் முயற்சிப்பதாக கூறியது. இதனால் அவரை கைது செய்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜிவ் குமாருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய உச்ச நீதிமன்றம், 7 நாட்களுக்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், சட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி ராஜிவ் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வலியுறுத்தப்பட்டது.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சிவ் குமார் ஆகியோர் கொண்ட விடுமுறைக்கால அமர்வு முன்பு ஆஜரான ராஜிவ் குமாரின் வக்கீல், ‘‘கொல்கத்தா நீதிமன்றத்தில் தற்போது வக்கீல்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. எனவே சட்ட பாதுகாப்பு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். 7 நாள் சட்ட பாதுகாப்பில் ஏற்கனவே 4 நாள் முடிந்து விட்டதால், இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘கைது நடவடிக்கைக்கு தடை விதித்தது தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு. இங்கு தலைமை நீதிபதிதான் முதன்மையானவர் என்பது வக்கீலாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, பதிவுத்துறையை அணுகி உரிய அமர்வில் மனு மீதான விசாரணையை பட்டியலிட அணுகுங்கள்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: