கருத்துக் கணிப்பில் உண்மை இல்லை 23ல் பாஜ.வுக்கு அதிர்ச்சி காத்திருக்கும்: காங்கிரஸ் நம்பிக்கை

புதுடெல்லி: `தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை. மே 23ம் தேதி ஆளும் பாஜ.வுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று காங்கிரஸ் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19ல் முடிவடைந்தது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று முன்தினம் இறுதிக் கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியானது. அதில் பாஜ கூட்டணி 285 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 134 தொகுதிகளிலும் இதரக் கட்சிகள் 137 இடங்களிலும் சராசரியாக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜிவ் கவுடா கூறியபோது, ``தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் நம்பிக்கையில்லை. மே 23ம் தேதி வரை காத்திருங்கள். ஆளும் பாஜ, அரசியல் வட்டாரங்களுக்கு நாங்கள் அதிர்ச்சி அளிப்போம். தற்போதைய சூழலில் எத்தனை இடங்கள் கிடைக்கும், எவ்வளவு சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது பற்றி கணிப்பது கடினமானது. நம் நாட்டில் ஒருவித பழக்கம் உள்ளது. அதாவது மக்கள் தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்று வெளியில் சொல்ல மாட்டார்கள்’’ எனக் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா கூறுகையில், ``கருத்துக் கணிப்புகள் என்பது வீண்பேச்சு. இதனைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வாக்கு இயந்திரங்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜ வெற்றி பெறும் என்பது எதிர்க்கட்சிகளிடையே ஒருவித பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருந்தாலும் கூட, கடந்த 2004ம் ஆண்டு நடந்தது போல் நடக்காதா என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2004ம் ஆண்டு பாஜ வெற்றி பெறும் என்று அனைத்து கருத்துக் கணிப்பிலும் கூறப்பட்ட நிலையில், மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு கூட காங். வெற்றி பெற முடியாது என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதை ஏற்க முடியவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Related Stories: