நாளை மறுநாள் தெரியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி: சிவசேனா கருத்து

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜ.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முயற்சிப்பதை சிவசேனா குறை கூறியுள்ளது. பல சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஒரு கூட்டணி அரசு ஏற்படுவதை இந்த நாடு தாங்கிக் கொள்ளாது என்று அக்கட்சி கூறியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கூறுகின்றன. தேசிய ஜனநாய கூட்டணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குறைந்தது 5 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர். தற்போதைய தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அவர்களுடைய கனவுகள் தகர்ந்து போகும். பல சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஒரு கூட்டணி அரசு ஏற்படுவதை இந்த நாடு ஏற்காது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் டெல்லியில் (மத்திய அரசு) ஸ்திரமற்ற நிலை ஏற்படும், அதை வைத்து லாபம் அடையலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். பாஜ ஆட்சிக்கு வர முடியாது என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

எனவே பாஜ.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஆதரவையும் திரட்ட கடுமையாக முயற்சித்து வருகின்றன. சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவருடைய முயற்சி பலிக்காது. அவர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்தார். ஆனால் மே 23ம் தேதி மாலை வரைக்கும் கூட்டணி தொடரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. இடதுசாரி கட்சிகளுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு இடமும் கிடைக்காது. அதே கதிதான் ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப், டெல்லி மற்றும் அரியானாவில் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: