தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு கமலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த வாரம் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரர் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கமல்ஹாசன் தரப்பில், “அரவக்குறிச்சி பேச்சால் எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே குறித்துத்தான் கமல் பேசினார். ஒட்டு மொத்த இந்துக்கள் குறித்து அவர் பேசவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், ‘‘பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. கமல்ஹாசனுக்கு எதிராக இதுவரை 76 புகார்கள் வந்துள்ளன” என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் மனுவின் மீது மே 20ம் தேதி (நேற்று) தீர்ப்பு அளிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிபதி பி.புகழேந்தி ஒத்திவைத்தார். இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கமலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், “ 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி ஜே.எம்.2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கமல்ஹாசன் நேரில் ஆஜராகி, ரூ.10 ஆயிரத்திற்கான இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: