தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நைட்விஷன் பைனாகுலர்: காவல்துறை உயரதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவினருக்கு, இரவிலும் கண்காணிக்கும் வகையில் நவீன ‘நைட் விஷன்’ பைனாகுலர் வாங்க உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் இருந்து நக்சல்கள் தமிழகத்தில் ஊடுருவாமல்  தடுக்கும் வகையிலும், உள்ளூரில் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையிலும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முதன்முதலாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களிலும் கடந்த 2016ல் நக்சல் தடுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில்  இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 13 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு துப்பாக்கிகள், பைனாகுலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி ஆகிய மாவட்டங்களில் தற்போது அதி நவீன பைனாகுலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இரவு நேர தேடுதல் வேட்டையின்போது பயன்படுத்துவதற்காக நைட் விஷன் பைனாகுலர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட உள்ளது. இதன்மூலம் இரவு நேரத்திலும் நக்சல் நடமாட்டம் இருந்தால் துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியும். விரைவில் இந்த பைனாகுலர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: