தேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: தேசிய அளவிலான ஜூனியர் தரவரிசை பேட்மின்டன் போட்டி  (யு-19 ) சென்னையில் இன்று  தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பேட்மின்டன் சங்க பொதுச் செயலர் வே.அருணாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான இந்த தொடர் மே 21ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சுமார் 1200 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 175 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அறிமுக வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பளிக்கவே இப்படி அதிக எண்ணிக்கையில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போட்டிகள் தகுதி சுற்று, முதன்மை சுற்றாக நடத்தப்படும். முன்னணி வீரர்கள் நேரடியாக முதன்மை சுற்றில் பங்கேற்பார்கள். இந்த போட்டியின் மூலம் வீரர்களின் தரவரிசை நிர்ணயம் செய்யப்படும். சீனாவில் நடைபெற உள்ள ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கும் இப்போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம். நேரு உள் விளையாட்டரங்கில் போட்டிகள் நடைபெறும். ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். இவ்வாறு அருணாச்சலம் தெரிவித்தார்.

× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது