உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆமிர், ரியாஸ் தேர்வு

கராச்சி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது ஆமிர், வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததை அடுத்து... ஜுனைத் கான், பாஹீம் அஷ்ரப், அபித் அலி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் வஹாப் ரியாஸ், முகமது ஆமிர் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன் ஆசிப் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ரியாஸ் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெறாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி மே 24, 26ம் தேதி முறையே ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது. உலக கோப்பையில் தனது முதல் லீக் ஆட்டத்தில் மே 31ம் தேதி பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, பாபர் ஆஸம், பகார் ஸமான், ஹரிஸ் சோகைல், ஹசன் அலி, இமத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது ஆமிர், முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், ஷதாப் கான், ஷாகீன் அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.


× RELATED மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் ஆலோரை அணி வெற்றி