இத்தாலி ஓபன் டென்னிஸ் 9வது முறையாக நடால் சாம்பியன்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) நேற்று முன்தினம் இரவு மோதிய நடால், அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-0 என வென்று முன்னிலை பெற்றார். எனினும், 2வது செட்டில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நடாலுக்கு ஈடுகொடுத்த ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, 3வது செட் ஆட்டத்திலும் ஜோகோவிச் கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடாலின் அசுர வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய அவர் எதிர்ப்பின்றி சரணடைய, நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 9வது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 2 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 54 போட்டிகளில் ஜோகோவிச் 28-26 என முன்னிலை வகிக்கிறார். ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து போட்டிகளில் நடால் 34வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: