×

அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித், 400 மாணவர்களின் கல்விக் கடனை தானே ஏற்பதாக உறுதி அளித்தார். இதைக் கேட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் சந்தோஷத்திலும், ஆச்சரியத்திலும் வாயடைத்து போயினர். அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் மோர்ஹவுஸ் கல்லூரி இயங்கி வருகிறது. இது கறுப்பின மாணவர்களுக்கான ஆண்கள் கல்லூரியாகும். இங்கு படிப்பவர்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். கல்விக் கடன் பெற்றே படித்து வருபவர்கள். இப்படிப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டுக்கான கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், 430 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் தொழிலதிபர் ராபர்ட் எப் ஸ்மித்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அவர் பேசுகையில், ‘‘எனது குடும்பம் 8 தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறது. நாங்கள், உங்கள் வாழ்க்கை என்ற பேருந்துக்கு கொஞ்சம் எரிபொருளை கொடுக்க முடிவு செய்துள்ளோம். இனி, 2019ம் ஆண்டு  வகுப்பறை எனதாகும். இங்கு பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களின் கல்விக் கடனை நானே அடைக்கிறேன் என உறுதி அளிக்கிறேன்’’ என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் சந்தோஷத்தில் எழுந்து நின்று உற்சாகமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியை பிரமித்துப் போயினர். கைத்தட்டல்கள் அடங்க சில நிமிடங்கள் ஆனது. பின்னர் பேசிய ராபர்ட், ‘‘எனது இந்த வகுப்பறை இதேபோன்ற உதவிகளை எதிர்க்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறேன்’’ என்றார். இதற்கு மாணவர்கள் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.

ராபர்ட் அறிவித்தபடி 430 மாணவர்களின் மொத்த கல்விக்கடன் 40 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.278 கோடியாகும். ஏற்கனவே அவர் மோர்ஹவுஸ் பள்ளிக்கு ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளார். ராபர்ட்டின் அறிவிப்பால், 430 மாணவர்களின் வாழ்க்கை ஒருநொடியில் மாறிவிட்டது. முதலீடு நிறுவனத்தின் சிஇஓவான ராபர்ட் பெரும் கோடீஸ்வரர் மட்டுமல்ல சிறந்த கொடையாளி என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்குவதை வழக்கமாக கொண்டவர். இம்முறை இவரது அறிவிப்பானது, உலகம் முழுவதும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : At the American College Graduation Ceremony 400 megabyte prize for students: businessman Robert announces Life changed in a moment
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...