இழந்த அடையாளத்தை மீட்க புதிய அவதாரம் எடுக்கிறார் நிதிஷ்

பாட்னா: பா.ஜ.வுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்தபின்பு, மதச்சார்பற்றவர் என்ற அடையாளத்தை நிதிஷ் குமார் இழந்துவிட்டதுபோல் தெரிகிறது. அதனால் அவர் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்பு, தனது இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க மறு அவதாரம் எடுக்கலாம் என கூறப்படுகிறது.

பீகாரில் மதச்சார்பற்ற தலைவராக அடையாளம் காணப்பட்டவர் முதல்வர் நிதிஷ் குமார். கடந்த 2009ம் மற்றும் 2010ம் ஆண்டு தேர்தலில் பீகாரில் மோடி நுழைய தடை விதித்தவர். மோடியை பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அவர் தே.ஜ கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டு சேர்ந்து பீகாரில் ஆட்சி அமைத்தார். லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்றார்.  துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அப்போது நிதிஷ் கூறிய ஆலோசனைகளை தேஜஸ்வி கேட்கவில்லை. ஊழல் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறி, வேறு வழியின்றி நிதிஷ்குமார் மீண்டும் தே.ஜ கூட்டணியில் இணைந்து பீகார் முதல்வரானார். அதன்பின் பீகாரின் வளர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்கியது. பீகார் முழுவதும் தரமான ரோடுகள் போடப்பட்டன, கிராமங்கள் முழுவதும் மின்வசதி செய்யப்பட்டன. பீகாரின் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் மேம்படுத்தப்பட்டன. இதனால் இந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பெயரை சொல்லி வாக்குச் சேகரித்தார் நிதிஷ். இதனால் நம்பகத்தன்மை மட்டும் அல்ல மதச்சார்பற்ற தலைவர் என்ற அடையாளத்தையும் நிதிஷ் இழந்தார்.

பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்ட பிரசாரத்துக்கு அதிகளவில் கூட்டம் வந்தது. ஆனால் நிதிஷ் பிரசாரத்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. லாலுவின் மனைவி ரப்ரி தேவி கூட, முதல்வர் நிதிஷ் குமாரை கிண்டலடித்தார். ‘‘பிரக்யா தாகூருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிதிஷ் குமார், எதற்காக பா.ஜ ஆதரவுடன் ஆட்சி நடத்த வேண்டும்?’’ என ரப்ரி கேள்வி எழுப்பினார். இந்த தேர்தல் முடிவுக்குப்பின், மோடி மீண்டும் பிரதமராக வந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சிகள் தேர்வு செய்யும் நபர் பிரதமர் ஆனாலும் சரி, தனது இழந்த அடையாளத்தை மீட்டெடுக்க, நிதிஷ் புதிய அவதாரம் எடுக்க போகிறார் என கூறப்படுகிறது.

Related Stories: