சேலத்தில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பெரம்பூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கொத்தவால்சாவடி பகுதியில் மண்டல நல அலுவலர் டாக்டர் கௌசல்யா, பகுதி சுகாதார அலுவலர் மாப்பிள்ளை துரை, சுகாதார ஆய்வாளர் சுப்புராயலு, துப்புரவு ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் தீவிர சோதனை செய்தனர். அப்போது, ஆதியப்பன் தெருவில் ஒரு மீன்பாடி வண்டியில் 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சேலத்தில் பிளாஸ்டிக் தயாரித்து லாரி மூலம் சென்னைக்கு கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. தொடர்ந்து கொத்தவால்சாவடி பகுதியில் கோமதி பிளாஸ்டிக் என்ற கடையின் குடோனை சோதனை செய்ததில், அங்கு சுமார் 2.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் குறித்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: