கல்லறை தோட்டத்தில் அனுமதி மறுப்பு சடலத்துடன் உறவினர்கள் மறியல்

அண்ணாநகர்: கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் சடலத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் தசரதன் (50). இவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட தசரதன் நேற்று முன்தினம் இறந்தார். அவரது சடலத்தை அதே பகுதியில் உள்ள கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில்  புதைக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை இறுதிச் சடங்கு செய்ய சடலத்துடன் கல்லறை தோட்டத்திற்கு  புறப்பட்டனர்.

அப்போது, அந்த கல்லறை தோட்டத்தை  பராமரித்து வரும் பாதிரியார், ‘‘எனது சர்ச்சிக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த கல்லறை தோட்டத்தில்  சடலத்தை புதைக்க அனுமதி உண்டு. வெளி நபர்களுக்கு இடமில்லை,’’ என்று கூறி கல்லறை தோட்டத்தை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். நொளம்பூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, மேற்கண்ட கல்லறை தோட்டத்தில் சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: