மெரினாவில் தொடர் செல்போன் பறிப்பு 2 கொள்ளையர்கள் சிக்கினர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக அண்ணா சதுக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்த் முருகன், தலைமை காவலர் அருள், காவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர் அதில், புதுப்பேட்டை முனுசாமி லேன் பகுதியை சேர்ந்த ஜிக்கந்தர் (19), ஆயிரம் விளக்கு சுகந்திரா நகரை சேர்ந்த வினோத் (19), கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த திலீப் (23), மேற்கு சைதாப்பேட்டை கே.பி.கோயில் தெருவை சேர்ந்த வேன் டிரைவர் பாலாஜி (20) என தெரியவந்தது. இவர்களில், சிக்கந்தர் மற்றும் வினோத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய  பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள டிரைவர் பாலாஜி மற்றும் திலீப்பை தேடி வருகின்றனர்.

* மேற்கு தாம்பரம்,  சிடிஓ காலனி, 4வது தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட  மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையை சேர்ந்த சாலமன் ராஜ்குமார்  (38) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* செங்குன்றத்தை  சேர்ந்த முனுசாமி (40) என்பவரை மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி திருவொற்றியூர், பிள்ளையார் கோயில்  தெருவை சேர்ந்த உமர் (30) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சையது அலி (35). நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், ேநற்று முன்தினம் இரவு தனது ஒரு மாத ஊதியம் ரூ.31 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது, 4 பேர் கத்தி முனையில் சையது அலியை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.31 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினர்.

* நங்கநல்லூர் ஏ.ஜி.எஸ். காலனி 3வது  தெருவை சேர்ந்த நளினி (76), நேற்று வீட்டின்  அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 ஆசாமிகள், நளினி  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.

Related Stories: