காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ்: நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற தணிக்கையில் ஊழல் முறைகேடுகள் நிரூபணம் ஆனதால் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக்குழுவை கலைக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் செல்வம் சம்மன் அனுப்பியுள்ளார். நாளைக்குள் (மே 22) பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதால் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ததுபோல் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவும் கலைக்கப்படுவது உறுதியாகிவிட்டது. காஞ்சிபுரத்தில் கைத்தறித்துறை கட்டுப்பாட்டில் 22 அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் தவிர மற்ற சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

கூட்டுறவு சங்கத்தில் அதிமுக சங்க நிர்வாகக் குழுவினரின் ஊழல் முறைகேடுகள் காரணமாக லாபத்தில் செயல்பட்ட அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கமும் தற்போது  நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.34 கோடி ஊழல் நடைப்பெற்றது நிரூபணமானதால் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அதில் தொடர்புடைய மற்ற இயக்குநர்களுக்கும் தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு நோட்டிஸ் வழங்க கைத்தறித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017 - 18ம் ஆண்டில் சுமார் ரூ.2கோடி ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஊழல் முறைகேடுகளை இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக சங்க மேலாண் இயக்குநர் உள்பட 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2017- 18ம் ஆண்டின் சங்க தணிக்கை முடிக்கப்படாமல் காலதாமதப்படுத்தி வந்த சங்க நிர்வாகக் குழுவினரின் போக்கால் சங்க உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு பொங்கல் போனஸ் மறுக்கப்பட்டது. சங்க தணிக்கை அறிக்கை வெளியானால் நிர்வாகக் குழுவினரின் ஊழல் முறைகேடுகள் வெளிவரும் என்பதால் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர். நீண்ட நாள்களாக சங்க தணிக்கை அறிக்கை வெளியிடாமல் இழுத்தடிக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முன்பு தணிக்கை அதிகாரிகளால் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தணிக்கை சான்று வெளியிடப்பட்டது. மேலும் மறு தணிக்கை கோரிய சங்கத்தலைவரின் கோரிக்கை தணிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

Related Stories: