பம்மல் நகராட்சியில் மாட்டு தொழுவமாக மாறிய சிறுவர் பூங்கா: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல்லாவரம்: பம்மல் நகராட்சியில் உள்ள சிறுவர் பூங்காவை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், அங்குள்ள சிலர் தங்களது மாடுகளை கட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். பம்மல் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள சங்கர் நகர் பிரதான சாலையில், பஞ்சாயத்து காலனி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இந்த பூங்காவை அப்பகுதி சிறுவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை முறையாக பராமரிக்காததால், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகிறது. மேலும், பூங்கா எப்போதும் திறந்தே கிடப்பதால், அப்பகுதியில் மாடுகளை வளர்க்கும் சிலர், தங்களது மாடுகளை பூங்கா வளாகத்தில் கட்டி வைக்கின்றனர்.

இந்த மாடுகளின் கழிவுகள் பூங்கா வளாகத்தில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சிறுவர்கள் இந்த பூங்காவை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதால் எங்கள் பகுதியில் உள்ள, சிறுவர் பூங்காவில் விளையாட குழந்தைகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், பூங்கா வளாகம் மாட்டுத் தொழுவம் போல் மாறியுள்ளதால், சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், மாடுகள் முட்டி விடுமோ என்ற அச்சத்தில் குழந்தைகளை பூங்காவிற்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது. அங்கு நிலவும் சுகாதார சீர்கேடால் எங்கள் குழந்தைகளுக்கு நோய் பரவுமோ என்ற அச்சம் உள்ளது.

பல லட்சம் செலவில் அமைத்த இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பகலில் மாடுகள் தொல்லை மட்டுமின்றி, இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதே இல்லை. எனவே, இந்த சிறுவர் பூங்காவை முறையாக பராமரிப்பதுடன், அங்கு மாடுகளை கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும். தினசரி காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பூங்காவை பூட்டி வைக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: