திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக்கில் 24 மணி நேர மது விற்பனை கண்டித்து மறியல்: பெட்ரோல் கேனுடன் வாலிபர் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக கூறி வாலிபர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, சேலம், கரூர் போன்ற பல மாவட்டங்களுக்கு பஸ்கள் வந்து செல்கிறது. மேலும், திருப்பூர் மாநகருக்குள் செல்லக்கூடிய டவுன் பஸ்களும் வந்து செல்கிறது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கிருந்து பஸ்கள் வெளியே வரக்கூடிய புதுமார்க்கெட் வீதியிலுள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும். குடிமகன்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கார்மேகம் (34) என்பவர் நேற்று காலை பெட்ரோல் கேனுடன் அந்த டாஸ்மாக் கடை முன் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார் அவரை சமரசம் செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Related Stories: