13 பேர் பலியான துப்பாக்கிச்சூடு சம்பவம் முதலாமாண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் நாளை அனுசரிப்பு: பேரணி, அமைதி ஊர்வலம் நடத்த தடை

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நாளையுடன் (22ம் தேதி) ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தூத்துக்குடி பெல் ஓட்டலில் ஒரு தரப்பினர் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகின்றனர். இதில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மற்றொரு தரப்பினர் தாங்கள் போராட்டம் நடத்திய பகுதிகளிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த நினைவஞ்சலி கூட்டம், பேரணி, அமைதி ஊர்வலம் நடத்த பொது அமைதியை காரணம் காட்டி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டதாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டவர்கள் கூறுகின்றனர். இதையொட்டி தூத்துக்குடி நகர் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போராட்டக் குழுவினர் உள்ளிட்ட 47 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்டிஓ முன்பு ஆஜராக உத்தரவிட்டனர். இதற்காக பலர் நேற்று தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் சப்-கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தார்.

Related Stories: