பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு: வேளாண் அதிகாரிகள் தகவல்

வேலூர்:  தமிழகத்தில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் காரீப் முதல் 3 பருவங்களில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. இதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம் 10 மாவட்டங்கள் என ஐசிஐசிஐ லொம்பார்டு நிறுவனம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய வேளாண் காப்பீட்டு கழகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளால் சேதமடையும் பயிர்களையும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு முதல் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘வறட்சி, வெள்ளத்தால் பயிர்கள் நாசமாதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. வன விலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு முதல் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: