கருத்துக்கணிப்புகளை நம்பமாட்டேன் நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: தேவகவுடா பேட்டி

மன்னார்குடி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மன்னார்குடியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலுக்கு மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது மூத்த மகனும் கர்நாடக மாநில பொதுப்பணி மற்றும் மின்சார துறை அமைச்சருமான ரேவண்ணாவுடன் சுவாமி தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தார். அவருக்கு கோயிலின் தீட்சிதர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். செங்கமலத்தாயார் சன்னதிக்கு சென்ற தேவகவுடா அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளை  சிறப்பாக செய்து முடித்துள்ளோம். மக்கள் எங்களுக்கு தங்களின் ஏகோபித்த ஆதரவை அளித்துள்ளனர். அந்த நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம். பொதுவாகவே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை நான் நம்ப மாட்டேன். இந்நிலையில் அண்மையில் வெளியான  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை நான் நம்பவில்லை. மக்களின் முழுமையான ஆதரவு  எங்கள் கூட்டணிக்கு இருப்பதால் கருத்து கணிப்பு முடிவுகள் மாறும். கர்நாடகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கூறினார்.

மழை பெய்தால் தமிழகத்துக்கு நீர் திறக்க வாய்ப்பு

தேவகவுடாவின் மூத்த மகனும், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணாவிடம் வழக்கமாக ஜூன் 12ம் தேதி தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. எனவே கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. மழையும் பெய்யவில்லை. மழை பெய்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: