ஓட்டு இயந்திர தில்லுமுல்லு விவகாரம் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் இன்று மனு

புதுடெல்லி: எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம், விவிபேட் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், தெலுங்கு தேசம் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று மாலை புகார் மனு அளிக்க உள்ளன. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 50 சதவீத விவிபேட் சீட்டுகளை, ஓட்டு இயந்திரத்தின் பதிவுகளுடன் சரிபார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் 21 எதிர்க்கட்சிகள் மனு அளித்தன. இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 5 விவிபேட் இயந்திர பதிவுகளை சரிபார்க்க உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்பில் பா.ஜ மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது.

இதற்கிடையே, ‘‘தேர்தல் கருத்து கணிப்பு எல்லாம் வீண் பேச்சு. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்காகத்தான் கருத்து கணிப்பு மூலம் வதந்தி பரப்பப்படுகிறது’’ என டிவிட்டரில் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார். ஒரு விவிபேட் சீட்டுகளின் எண்ணிக்கை பொருந்தவில்லை என்றாலும் அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என யெச்சூரி கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை, எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தொடர்பாக மனு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: