பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கோப்பில் உடனே ஆளுநர் கையெழுத்திட வேண்டும்: அற்புதம்மாள் கோரிக்கை

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யும் கோப்பில் தமிழக ஆளுநர் கையெழுத்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாம்பரம் தபால் நிலையத்தில் ஆளுநருக்கு தபால் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா, பேரறிவாளன் தாயார் அற்பும்மாள் தொடங்கி வைத்தனர். 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பிய பிறகு ஆளுநருக்கு தபால் அனுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறியதாவது:

பிரிவு 161 என்பது மாநிலத்தின் உரிமை. ஆளுநர் கையெழுத்துடன் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றமே சொல்லியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கு இருந்ததால் அவகாசம் கொடுத்தோம். அந்த வழக்கை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்து விட்டது. 2வது முறையாகவும் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. ஆளுநர் கையெழுத்துடன் விடுதலை செய்யலாம் என்று. ஆகவே இதற்கு மேலேயும் ஆளுநர் காலம் கடத்த கூடாது. 28 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார்கள். நீதிமன்றமே சொன்ன பிறகும் ஏன் விடுதலை செய்யவில்லை என்ற குரல்தான் எல்லா பக்கத்திலும் இருந்து ஒலிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துவது உண்மை என்றால் என் மகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என கேட்கிறேன். உச்ச நீதிமன்றமே ஆளுநர் கையெழுத்துடன் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முழு உரிமை உள்ளது என சொல்லி உள்ளது. அதனால் ஆளுநர் 7 பேரையும் விடுதலை செய்யும் கோப்பில் உடனடியாக கையெழுத்திட வேண்டும். 8 மாதமாக கடிதங்கள் அனுப்பி வருகிறோம். 8 மாதம் முடிந்து 9வது மாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆளுநர் கையொப்பம் இட  இனிமேலும் காலம் கடத்த கூடாது.

Related Stories: