முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதை தடுக்க எஸ்இடிசி இணையதளத்தை மேம்படுத்த ேவண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

சென்னை: சர்வர் பிரச்னையில் அரசு பஸ்களில் டிக்ெகட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. எனவே, போக்குவரத்துத்துறையின் இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி, சிலிப்பர் பஸ்கள் வகையிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களுக்கும் இந்த பஸ்கள் செல்கிறது. தினசரி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், சுமார், 280க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதை சராசரியாக தினமும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் வெளியூர்களுக்கு செல்வோர் சாதாரண பஸ்களை விட, ஏசி பஸ்களையே அதிகமாக விரும்புகின்றனர்.

இவர்களின் வசதிக்காக ஏராளமான ஏசி பஸ்களை, அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது. அதன்படி ஏசி ஸ்லீப்பர் பஸ்கள் சென்னை, கோயம்பேடு - பெங்களூரு (இரவு 10.30); போடி (இரவு 8.00); கோபி (இரவு 7:00); கீழக்கரை (இரவு 9.00); மதுரை (இரவு 10.00); சேலம் (இரவு 10:00); சிவகாசி (இரவு 9:00); திருநெல்வேலி (9:00); தூத்துக்குடி (இரவு 8:00) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஏசி ஸ்லீப்பர்-சீட்டர் பஸ்கள் சென்னை எழும்பூர்-கரூர் (இரவு 9.30) இடையே இயக்கப்படுகிறது. மேலும் ஏர் கன்டிஷன் பஸ்கள் சென்னை-கோவை (இரவு 9, 10 மணி); தர்மபுரி (மதியம் 1.15, இரவு 10) என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை பயன்படுத்துவோர் குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னதாகவே, போக்குவரத்துத்துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணித்து வருகிறார்கள்.

 

இவ்வாறு முன்பதிவு செய்யும் போது பிரச்னைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதவாது இணையதளத்தில் சென்று பார்க்கும் போது பஸ்சில் காலி சீட் இருப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் உள்ளே சென்று முன்பதிவு செய்ய முயற்சிக்கும் போது, முன்பதிவு செய்ய முடியவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து மக்கள் தனியார் பஸ்களை நோக்கிச்செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு போக்குவரத்துக்கழத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், எனவே போக்குவரத்துத்துறையின் இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எஸ்இடிசியின் இணையதளத்தில் எவ்விதமான பிரச்னையும் இல்லை. சிறப்பாக இயங்கி வருகிறது. பலரும் முன்பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். ஒருசிலர் முன்பதிவு செய்யும் போது இதுபோல் பிரச்னை ஏற்படுகிறது என்றால், அதற்கு அவர்களது மொபைல் போனில் பிரச்னை இருக்கலாம். அல்லது அவர்கள் பயன்படுத்தும் இணையதளத்தில் பிரச்னை இருக்கலாம். மற்றபடி எங்கள் தரப்பில் எவ்விதமான பிரச்னையும் இல்லை’’ என்றனர்.

Related Stories: