நடிகர் சங்க நிலம் முறைகேடு விவகாரம் நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் ஆஜராகவில்லை

சென்னை: நடிகர் சங்கத்தின் நிலம் முறைகேடு வழக்கில் முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி நேற்று காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜர் ஆகாததால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமம் உள்ளது. இங்கிருந்த, நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட நால்வர், முறைகேடாக விற்பனை செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், நடிகர் விஷால் புகார் அளித்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை, வேறு ஏஜன்சியின் விசாரணைக்கு மாற்றவும், முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலர் விஷால் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி புகார் குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்சியாக நடிகர் விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் சரத்குமார் ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணைக்கு தேவையான உரிய ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்யும்படி நடிகர் விஷாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மன் தொடர்பாக விஷால் ஆஜராகவில்லை. பட ஷூட்டிங் இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக விஷால் தரப்பில் பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மேலாளர் மூலம் விஷால் தரப்பு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சங்கத்தின் நிலம் முறைகேடு வழக்கில் மே 20ம் தேதி ராதாரவி, சரத்குமார் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜர் ஆகவேண்டும் என காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் நேற்று காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார்முன் ஆஜர் ஆகாததால் இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Related Stories: