மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை எதிரொலி ஜூன் வரை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியுமா? தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

சென்னை: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை எதிரொலி ஜூன் மாதம் வரை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியுமா என்பது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 89 அணைகள் உள்ளது. இதில், குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியாறு, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய 15 அணைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக மழை பெய்தது. இதனால், 15 அணைகளின் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 29 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சோலையாறு ஆழியாறு, திருமூர்த்தி உள்ளிட்ட அணைகள் வறண்டு வருகிறது. தற்போதைய நிலையில் 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 16 டிஎம்சியும், 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 5 டிஎம்சியும், 5.5. டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறில் 1.3 டிஎம்சியும், 10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறில் 1.2 டிஎம்சியும், 13 டிஎம்சி கொள்ளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 2.5 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரை, அதாவது, ஜூன் இரண்டாவது வாரம் வரை குடிநீருக்கு சமாளிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் எஸ்.கே ஹல்தார் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் அணைகளின் நீர் மட்டம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், நீரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அணைகளில் இருந்து சராசரி நீர் இருப்பை விட தற்போது 20 சதவீதம் குறைவு ஆகும். எனவே, அணைகளில் நீர் மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கும் வரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம், சென்னை குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தலைமை செயலாளர், தற்போது தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும். குடிநீருக்கு மட்டுமாவது தண்ணீர் திறக்க வழிவகை உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது மெட்ரோ வாரியம் சார்பில் தற்போது சென்னை குடிநீர் பிரச்சனையை போக்க கல்குவாரி, ஏரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரித்து தருவது தொடர்பாக விளக்கினார்கள். தொடர்ந்து தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் அணைகளில் நீர் இருப்பு விவரங்களை வைத்து சமாளிக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். அடுத்த வாரத்தில் ஜூன் மாதம் முழுவதும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தயார் செய்து வர வேண்டும்’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: