தேர்தல் வெற்றி பாஜவுக்கு பரிசாக அமையும் : தமிழிசை பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பாஜவுக்கு வெற்றி பரிசாக அமையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்த அத்தனை தலைவர்களும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி வருங்காலத்தில் நல்ல திட்டங்களை எடுத்து செல்வதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளைய தினம்(இன்று) இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள  அசோகா ஓட்டலில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன், பெஸ்ட் ராமசாமி, சரத்குமார், ஜான்பாண்டியன், கார்த்திக், என்.ஆர்.தனபாலன், பூவை ஜெகன் மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தமிழக தேர்தல் பிரசாரத்திலும், தேர்தல் பணியிலும் சிறப்பாக செயலாற்றினார்கள். அதனால் அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அழைப்பின் பேரில் தமிழக தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன். பாஜக ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தால் கூட்டி விடுவோம். அது தான் பாஜக.இந்த தேர்தல் வெற்றி பாஜகவிற்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மிகப்பெரிய பரிசாக அமையும். தமிழகத்தில் இந்த கூட்டணி மிக அதிமான இடங்களை பெற வாய்ப்புள்ளது.

Related Stories: