575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 46 கோடி பத்திர நகல்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில் 10 சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திர நகல் கூட சரிபார்க்கவில்லை

* பரபரப்பு தகவல்கள் அம்பலம்

* மே.31க்குள் அறிக்கை அளிக்க டிஐஜிக்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 46 கோடி பத்திர நகல்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், 10 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு பத்திர நகல் கூட சரிபார்க்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்கள் கடந்த 2009 முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 1973 முதல் 2009ல் உள்ள 50 கோடி பத்திர நகல் பக்கங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தனியார் மென்பொருள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலம் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை 46 கோடி பத்திர நகல் பக்கங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் அலுவலகம் ஆய்வு செய்து ஒப்புதல் தர வேண்டும்.

 

ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்து சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்று சரிபார்க்கவில்லை. குறிப்பாக, மண்டல டிஐஜிக்கள் சென்னை வடக்கு, திருப்பூர், கோபிச்செட்டிபாளையம், ஊட்டி, திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 10 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நகல்கள் கூட சரிபார்க்கவில்லை. அதே போன்று, ராமநாதபுரம், பெரியகுளம், மத்திய சென்னை, மதுரை தெற்கு, விருதுநகர், மயிலாடுதுறை, அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகங்களில் 500 பத்திரங்கள் கூட சரிபார்க்கவில்லை. இந்த நிலையில் தற்போது வரை 46 கோடி பத்திரங்களின் நகல்களில் 4.3 லட்சம் பத்திர நகல்கள் மட்டுமே டிஐஜிக்கள் சரிபார்த்துள்ளனர். இந்த நிலையில், ஸ்கேன் செய்யப்பட்டு பல நாட்களான நிலையில், தற்போது வரை பத்திர நகல்களை சரிபார்க்கும் பணியை நிறைவு செய்யாததற்கான காரணத்தை அனைத்து மண்டல டிஐஜிக்கள் மே 31ம் தேதிக்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: