மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரக்கேடு

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. மதுரை-மேஸ்வரம் நான்குவழிச்சாலையில் தல்லாகுளம் பகுதி மானாமதுரை நகரின் துவக்கமாக உள்ளது. தல்லாகுளம் பகுதிக்கு அடுத்து ராஜகம்பீரம் ஊராட்சியில் உடையான்பட்டி, புதூர், அழகுநாச்சிபுரம், காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அருகே கால்பிரவு ஊராட்சிக்குட்பட்ட பீசர்பட்டினம், ஒத்தக்கடையிலும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இது முத்தனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட கிருங்காகோட்டை, பாப்பாமடை உள்ளிட்ட ஊர்களும் உள்ளன.

நான்குவழிச்சாலை பணி துவங்குவதற்கு முன் பேரூராட்சி குப்பைக்கிடங்கு தல்லாகுளம் பகுதியில் உள்ள மயானத்தை ஒட்டி செயல்பட்டு வந்தது. அந்த இடத்தின் பெரும்பகுதி நான்குவழிச்சாலைக்கு எடுக்கப்பட்டதால் இளையான்குடி ரோட்டில் மாங்குளம் விலக்கு அருகே புதிதாக குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டது. மானாமதுரை நகரில் தினமும் நூற்றுக்கணக்கான கோழிகடைகளில் இருந்து அகற்றப்படும் கோழிவுக்கழிவுகள் மாங்குளம் குப்பைக்குடங்கிற்கு எடுத்து செல்லப்பட வேண்டும். ஆனால் அங்கு கொண்டு செல்லப்படாமல் நான்குவழிச்சாலையில் உள்ள பழைய இடத்திலேயே கொட்டப்படுகின்றன. கோழி கழிவுகளை மூட்டைகளாக கட்டி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை முதல் மில் பகுதி வரை வீசியெறியப்படுகிறது. இதனை அப்பகுதியில் இருக்கும் நாய், காகங்கள் கொத்தி ரோட்டில் சிதறியடிக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து சமூகஆர்வலர் சத்தியராஜா கூறுகையில், ‘கோழி கழிவுகளை தல்லாகுளம் அருகே உள்ள பழைய குப்பைக்கிடங்கில் கொட்டுவதால் தேசிய நெடுஞ்சாலையில் துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் காகங்களால் இக்கழிவுகள் வீடுகளிலும் வந்து விழுகின்றன. நெடுஞ்சாலையில் வீசும் துர்நாற்றம் வாகனஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும் கோழி கழிவுகளை உண்ணும் நாய்களிடையே சண்டை ஏற்பட்டு அவை ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது’ என்றார்.

Tags : Madurai-Rameswaram , Four way road, Madurai, Rameswaram
× RELATED ராமானூரில் தேங்கிய குப்பைகளை அகற்றாததால் சுகாதார சீர்கேடு