வனத்துறையினரின் உதவியோடு காடுகள் அழகை ரசிக்க பரளிக்காடு சூழல் சுற்றுலா

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பரளிகாடு. சுற்றிலும் மலைகள் சூழ பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் வனங்களின் நடுவே பில்லூர் அணையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் வனத்துறை சார்பில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. இவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல வனத்துறையினரின் அனுமதி பெறுவது கட்டாயமாகும். பரளிகாட்டில் ஓடும் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்காக பரிசல் சவாரி நடத்தப்படுகிறது. பரிசலுக்கு 4 பேர் வீதம் பயணிக்கலாம். இதை தொடர்ந்து அரை மணி நேரம் ஆற்றில் பரவசத்துடன் பயணித்து அக்கரையில் கொண்டு சென்று பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். அங்கு காடுகளின் அழகை வனத்துறையினரின் உதவியோடு சுற்றி பார்க்கலாம். அவ்வப்போது மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் தென்படும். அரை மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் பரிசல் பயணம் தொடரும். இதை தொடர்ந்து 4 கி.மீ பரிசல் சவாரி முடிந்து கரைக்கு வந்தவுடன் பழங்குடியினர் மகளிர் குழுக்கள் மூலம் நடத்தப்படும். சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மேலும், ஆற்றில் குளியல், டிரக்கிங், மரங்களில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவது என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இது தவிர சுற்றுலா பயணிகள் வசதிக்காக தங்குவதற்கு மர வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் மட்டும் பரளிகாடு சூழல் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது வாரத்திற்கு 5 நாட்கள் சுற்றுலா மேற்கொள்ளப் படுகிறது. விரைவில் மரங்களில் பரண் அமைத்து விலங்குகளை பார்வையிடவும் மற்றும் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு செல்லும் வகையில் ஜிப் லைன் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டியுள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோரும் பரளிகாடு சூழல் சுற்றுலா தலத்திற்கு சென்று பரிசல் சவாரி செய்யவும் ஆற்றில் ஆனந்த குளியல் போடவும் பெரிதும் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

Tags : Paralikadu, tourism
× RELATED நாங்குநேரி தொகுதியில் உள்ள...