×

அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்து பாரம்பரிய மருத்துவங்கள் தரம் உயர்த்தப்படுமா?

வேலூர்: அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்து பாரம்பரிய மருத்துவங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,047 சித்த மருத்துவ நிலையங்கள், 100 ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள், 65 யுனானி மருத்துவ நிலையங்கள், 106 யோகா மற்றும் இயற்கை மருத்துவம், 107 ஓமியோபதி மருத்துவ நிலையங்கள் என மொத்தம் 1,425 இந்திய மருத்துவ நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்திய மருத்துவ முறைகளால் நிரந்தர தீர்வு கிடைப்பதால் மக்கள் சமீபமாக அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பாரம்பரிய மருத்துவ நிலையங்களில் அதிகப்படியானோர் சிகிச்சை பெற வருகின்றனர். சித்த மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு மருந்து வாங்கி செல்பவர்களும் உள்ளனர். சமீபத்தில் அனைவரையும் அச்சுறுத்திய டெங்கு போன்ற கொடிய பாதிப்புக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சித்த மருத்துவர்கள் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாரம்பரிய மருத்துவ நிலையங்களை தரம் உயர்த்துவதில் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், போதிய அளவில் மருந்துகள் சப்ளை செய்யப்படவில்லை என்றும் நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் அரசு காப்பீடு திட்டத்தை பாரம்பரிய மருத்துவ நிலையங்களில் பயன்படுத்தி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அரசு சித்த மருத்துவமனைகளில் நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தொடர்ச்சியாக மருந்துகளை வாங்கி செல்கிறோம். பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களுக்கு மருந்துகளை கொடுப்பதில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை மருந்துகளை வாங்கி செல்கிறோம். நீரிழிவு போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்ள வேண்டிய சூழலில் மருந்துகளை தாரளமாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட அளவிலான பாதிப்புகளுக்கு மட்டுமே எங்களிடம் மருந்துகள் இருக்கிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால், பாரம்பரிய மருத்துவத்தை தவிர்த்து அலோபதி மருத்துவத்தை நாடிச் செல்கின்றோம். எனவே, வீரியமிக்க மருந்துகள் அரசு சித்த மருத்துவமனைகளில் வினியோகிக்கப்பட வேண்டும்.

மேலும் ஒரு சில உடல் பாதிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு டாக்டர்கள் கூறுகின்றனர். இதற்காக, தனியார் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் பரிசோதனை நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவழிக்கிறோம். இல்லாவிட்டால் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஸ்கேன், பரிசோதனை செய்து கொள்ளும் வசதி பாரம்பரிய மருத்துவங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், காப்பீடு திட்டத்தில் அலோபதி மருத்துவத்தில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். எனவே, இந்திய பாரம்பரிய மருத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், நோயாளிகள் அரசு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்திய பாரம்பரிய மருத்துவங்கள் தரம் உயர்த்தப்பட அதிகளவில் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Traditional medicines, quality
× RELATED யானை தாக்கி விவசாயி பலி