×

வெயில் வாட்டி வதைப்பதால் குமரியில் நுங்கு விற்பனை ஜோர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்பான கடைகளில் குவிகிறார்கள். கரும்புசாறு, பழச்சாறு, பழக்கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளன. பொதுமக்களின் தேவைகள் அறிந்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. முக்கிய சாலைகளின் இரு பக்கமும் திடீர், திடீரென முளைத்துள்ள கடைகளில் கார், பைக்குகளில் வந்து மக்கள் குளிர்பானங்களையும், பழ வகைகளையும் வாங்கி செல்கிறார்கள். வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களிடம் தற்போது நுங்கு விற்பனை கடும் ஜோராக நடந்து வருகிறது.

ரூ.10க்கு 3, 2 என்ற வகையில் நுங்குகள் விற்பனையாகின்றன. உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஆரோக்கியமானதும் என்பதால் நுங்குகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நுங்கு சர்பத், நுங்கு போடப்பட்ட பதநீர் ஆகியவற்றை அருந்துவதில் மக்களுக்கு கொள்ளை பிரியம் ஏற்பட்டுள்ளது. விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கி செல்வதால், குமரி மாவட்டத்தில் நுங்கு தேவைகள் அதிகரித்துள்ளன. ஆனால் குமரி மாவட்டத்தில் சீசன் முடிந்து விட்டதால், வெளி மாவட்டத்தில் இருந்து தான் நுங்குகள் வருகின்றன. நுங்குகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடம் நுங்கு வெட்டும் இடத்திலேயே ஆர்டர் குவிந்து வருவதாகவும், கோடையை சமாளிக்க போதுமான நுங்கு இல்லாதது ஒரு காரணமாக இருப்பதாகவும் நுங்கு விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து நுங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

Tags : gourd sale ,Kumari , Vail, Kumari, jelly
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...