ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் உரிமமின்றி இயங்கிய பட்டாசு ஆலை மூடல்: இருவர் கைது

திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே உரிமம் முடிந்த நிலையில் ஒரு மாதமாக இயங்கிய பட்டாசு ஆலையை அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்து மூடினர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம், திருவேங்கடம் அருகே செல்லபட்டியில் இருந்து வரகனூர் செல்லும் சாலையில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. மதுரை, திருநகர் 4வது வார்டை சேர்ந்த சண்முகம் மகன் ராமச்சந்திரன், அவரது மனைவி அனுராதா ஆகியோருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையை கடந்த ஓராண்டுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த சூரார்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் காளிராஜ் (54), திருவேங்கடம் அருகேயுள்ள கீழாண் மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்த கன்னியப்பன் மகன் பெருமாள்சாமி (28) ஆகியோர் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தனர்.

இந்த ஆலையை நடத்துவதற்கான உரிமம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முடிந்து விட்டது. ஆனால், அதன் பிறகும் சட்ட விரோதமாக அங்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வந்தனர். ஏற்கனவே வரகனூர் பகுதியில் இருமுறை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியானதால் வருவாய் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதே போல் திருவேங்கடம் துணை தாசில்தார் புஷ்பாராணி, சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், திருவேங்கடம் எஸ்ஐ அய்யனார், தனிப்பிரிவு காவலர் வேல்முருகன், வரகனூர் விஏஓ செல்லமுருகன் மற்றும் போலீசார், அந்த ஆலையில் திடீர் ஆய்வு நடத்திய போது ஆலை உரிமம் முடிந்த நிலையிலும் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி அங்கு தயாரிக்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியதோடு பட்டாசு ஆலையை பூட்டு போட்டு மூடினர்.இது குறித்து திருவேங்கடம் துணை தாசில்தார் புஷ்பாராணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த திருவேங்கடம் போலீசார், அனுமதியின்றி பட்டாசு தயாரித்த காளிராஜையும், பெருமாள்சாமியையும் கைது செய்தனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை ஆட்டோவில் ஏற்றி குடோனுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

விழிப்புணர்வு தேவை
சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தொழிலாளர்கள் ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்லும் முன்பாக அந்த ஆலைக்கு முறைப்படி லைசென்ஸ் உள்ளதா என்று தெரிந்து கொண்டு வேலைக்கு செல்ல வேண்டும். மேலும் அங்கு பாதுகாப்பு கருவிகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என பார்க்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத பட்டாசு ஆலைகள் பற்றி தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தர வேண்டும். பட்டாசு தொழில் தெரியாமல் வேலைக்கு செல்பவர்கள் அங்கு உள்ள போர்மேனிடம் கேட்டு வேலையை கற்றுக் கொண்டு, அதன் பின்னர் பணியில் ஈடுபட வேண்டும். உரிய லைசென்ஸ் இல்லாத பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள். இது குறித்து தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராம மக்களிடத்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : two lakhs , firecrackers ,illegally
× RELATED ரயிலில் பட்டாசு எடுத்து செல்லாதீங்க......