பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களின் கல்விக்கடனை ஏற்ற அமெரிக்க தொழிலதிபர்..: மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி

ஜார்ஜியா: அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 400 மாணவர்களின் கல்விக்கடனை தானே செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லான்டாவில் அமைந்திருக்கும் மோர்ஹவுஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், அமெரிக்க தொழிலதிபரான ராபர்ட் எஃப்.ஸ்மித்துக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர். அப்போது பேசிய ராபர்ட், பட்டம பெறும் 400 மாணவர்களின் கல்விக்கடனை தாமே முழுமையாக செலுத்தவிருப்பதாக அறிவித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்நாட்டு மாணவர்களின் கல்விக்கடன் 40 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 278 கோடி ரூபாய் ஆகும்.

இந்த அறிவிப்பை கேட்டு மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகமடைந்து அரங்கமே அதிர கைதட்டி ஆரவாரம் செய்த நிலையில், அந்த மாணவர்கள் கருப்பின மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ராபர்ட் கூறியுள்ளார். ஏற்கனவே ராபர்ட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாயை உதவித்தொகையாக அறிவித்தார். ஆனால், நேற்று ராபர்ட் வெளியிட்ட இந்த அறிவிப்பு, 400 மாணவர்களுக்கும் சிறந்த யோகம் என்று தான் கூற வேண்டும். இதுகுறித்து பேசிய அக்கல்லூரியின் செய்தித்தொடர்பாளர், இந்த பரிசு கல்லூரி வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த நிகழ்வாகும். இதற்காக தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அவர்களுக்கு எங்கள் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories: