தமிழகத்திற்கு தண்ணீர் தரும் நிலையில் நாங்கள் இல்லை..: கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் கைவிரிப்பு!

கும்பகோணம்; தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு தற்போது இல்லை என்று கர்நாடக அரசு கைவிரித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 2018 டிசம்பரிலிருந்து மாதம் தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நிலையில் மக்கள் அனைவரும் தண்ணீருக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்நத 6 மாதங்களாக காவேரியில் முறையாக நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் தவிக்கின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக பொதுப்பணித்துறை ரேவண்ணா ஆகியோர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் இன்று தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரேவண்ணா, காவிரியில் தண்ணீர் திறக்க இது சரியான தருணம் அல்ல. கர்நாடகத்தில் போதுமான மழை பெய்யவில்லை என்றார். இதனால் காவிரியில் தண்ணீர் திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ரேவண்ணா குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 50 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. எனவே், கர்நாடக அரசிடம் நீர் திறக்க அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும் இந்த நிலையில், கர்நாடக அரசும் கைவிட்டுள்ளதால் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: