அழிவில் உள்ள சேவல் இனத்தை மீட்டெடுக்க நடந்த கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள்

திருச்சி :  தமிழகத்தில் உள்ள சேவல் இனத்தை மீட்டெடுக்க திருச்சி வயலூரில் கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து 300 சேவல்கள் பங்கேற்றது. சேவல்களில் பல வகைகள் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். அந்த வகையில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் என்பது தமிழ்நாட்டு இனம், மற்ற  மாநிலங்களில் இதை காண முடியாது.

அழிந்துவரும் இனங்களில் தற்போது நம்  தமிழக சேவலும் இடம் பெற்றுள்ளது. இதை மீட்டெடுக்க பல்வேறு அமைப்புகள்  விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்சி வயலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராக்போர்ட் அசில் ஆர்கானிஷேசன் சார்பில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தலைவர் லோகநாதன் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் அக்பர்உசேன், செயலாளர் சரவணன், பொருளாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் காகம் சேவல், மயில் சேவல், ஆந்தை சேவல், வள்ளூர் சேவல், கோழி வகை சேவல் என 5 வகையான சேவல்கள் இனங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்திலிருந்து 300 சேவல்கள் கலந்துகொண்டது. இந்த சேவல்களுக்கு 16 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது. அதில் சிறந்த 75 சேவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் முதல் 25 சேவல்களுக்கு 2 கிராம் தங்கமும், 50 சேவல்களுக்கு அண்டாவும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இங்கு சேவல் விற்பனையும் நடந்தது. இதில் சிறந்த சேவல்கள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. இது போன்ற கண்காட்சிகள் மூலம் சேவல் இனங்கள் வளர்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் ஏற்படும். இதனால் சேவல் இனங்களை அழிவில் இருந்து மீட்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: