×

மக்களவைத் தேர்தலுக்காக இணையதளங்களில் அரசியல் கட்சிகள் ரூ.53 கோடிக்கு விளம்பரம்: ஃபேஸ்புக் விளம்பரத்தில் பாஜக முதலிடம்

டெல்லி: மக்களவைத் தேர்தலுக்காக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக  நடந்தது. இதில்  தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் இறங்கின. குறிப்பாக இந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றின. சமூக வலைதளங்களுக்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டு பல  கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை நடத்தின. போலி செய்திகள், தேர்தல் விதிமுறைகளை மீறிய செய்திகள் ஆகியவை வெளியாகக்கூடாது என்பதில் சமூக வலைதள நிறுவனங்களும் கவனமாக இருந்தன. ஆனால் அதையும் மீறி பல செய்திகள்  பரப்பப்பட்டன. இந்நிலையில் தேர்தலையொட்டி ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இணையதளங்களில் அரசியல் கட்சிகள் சுமார் 53 கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தேர்தல்  முடிவடைந்த மே மாதம் வரை ஃபேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அதிகளவு விளம்பரங்களைச் செய்துள்ளன. இதில், பாரதிய ஜனதா கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக 4 கோடியே 23 லட்சம்  ரூபாய் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், கூகுளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு பாஜக விளம்பரங்கள் செய்துள்ளது.  எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஃபேஸ்புக்கில் விளம்பரங்களுக்காக ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. கூகுளில் விளம்பரங்கள் செய்ததற்காக 2  கோடியே 71 லட்சம் ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதற்காக ரூ.29.28 லட்சம் செலவு செய்துள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்ய 13.62  லட்ச ரூபாயும், கூகுளில் விளம்பரம் செய்ய 2.18 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது.

Tags : Parties ,elections ,Lok Sabha ,BJP , Lok Sabha Elections, Websites, Political Parties, Advertising, Facebook, Advertising in BJP
× RELATED மக்களவைத் தேர்தல்; அரசியல் கட்சிகள்...