கோடை வெயிலின் கொடூர தாக்குதலால் பரப்பலாறு அணையில் செத்து மடியும் மீன்கள்

* துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் உள்ள பரப்பலாறு அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மீன்கள் செத்து மடிகின்றன. மேலும் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,323 ஏக்கர் பாசன நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

alignment=

ஒட்டன்சத்திரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 90 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடியாகும். ஒட்டன்சத்திரம் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் பருவமழை தவறியதால் தற்போது அணையில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தினால் அணையில் உள்ள மீன்கள் ஆக்சிஜன் கிடைக்காமலும், இப்பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கொடூரமாக இருப்பதாலும் அணையில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றது.

செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் உணவாக உட்கொள்கின்றது. மேலும் இறந்த மீன்கள் அழுகி அணைப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: