கோடை வெயில் கொளுத்துவதால் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பு

* அருவி,ஆறுகள் வறண்டதால் ஏமாற்றம்

உடுமலை : கோடை வெயில் கொளுத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அருவி,அணை மற்றும் ஆறு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை, ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அணைகளை காண சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நீர் நிறைந்த அணைகளின் கரைகளிலும், அதன் அருகே உள்ள பூங்காக்களிலும் குடும்பம்,குடும்பமாக அமர்ந்து உற்சாகமாக பொழுதை போக்கி வருகின்றனர்.

 திருமூர்த்தி அணைக்கு தற்போது காண்டூர் கால்வாயில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணையில் ஓரளவு தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் அருகே உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதோடு, அதற்கு மேலே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கும் சென்று வருகின்றனர்.

 கத்திரி வெயில் தொடர்வதால் அணைக்கு மேல் பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து பாறையாக காட்சி அளிக்கிறது. பாறையை நனைத்து கொண்டு பைப் தண்ணீர் போல விழும் தண்ணீரையும் சுற்றுலா பயணிகள் பாட்டிலில் பிடித்து உடலை நனைத்து மகிழ்கின்றனர்.  அருவியை காண செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் அருவியில் தண்ணீர் விழவில்லை எனக் கூறிய போதும், ரூ.5 கட்டணத்தை செலுத்தி அரை கி.மீ தொலைவு நடந்து சென்று அருவியை காண செல்கின்றனர்.

அருவி வரை சென்று விட்டு தண்ணீரற்ற காய்ந்த பாறையை கண்டு ஏமாற்றத்துடன் மீண்டும் அமணலிங்கஸே்வரர் கோயிலுக்கு திரும்பினர்.

நேற்று வாரவிடுமுறை தினம் என்பதால் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் முகாமிட்டனர். அணைக்குள் இறங்கி குளிக்க பொதுப்பணித்துறை தடை விதித்திருப்பதால், சுற்றுலா பயணிகள் அணையின் கரையோரமாக அமர்ந்து உற்சாகத்துடன் பேசி,மகிழ்ந்ததோடு சிலர் கொண்டு வந்த உணவையும், சிலர் தாமாகவே சமைத்தும் உண்டனர்.

Related Stories: