தமிழகத்தை பொருத்தவரை இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

சேலம்: தமிழகத்தை பொருத்தவரை இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பல ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமியிடம் கருத்துக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு ஆகும். அதிமுக மாநில கட்சிதான், தேசிய கட்சி அல்ல. எனவே, தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே என்னால் கருத்து கணிப்பு பற்றி சொல்ல முடியும், தேசிய அளவில் சொல்ல முடியாது. 2016 தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் நான் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. எனவே, 23ம் தேதி வாக்கு எண்ணப்பட்ட உடன் உண்மை தெரிந்துவிடும் என்று கூறினார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் வெற்றிபெறும். சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதையடுத்து, 8 வழிச்சாலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகள் விரிவுபடுத்த வேண்டியது அவசியம்.

வாகனங்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கங்கள் மக்கள் நலனுக்காகவே செய்யப்படுகின்றன. மனிதர்கள் நினைத்தால் உருவாக்க முடியாதது எதுவுமில்லை, ஆனால் உயிர் போனால் வராது. எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கங்கள் அவசியம். அதுமட்டுமல்லாது, தொழில்வளர்ச்சிக்கும் சாலைகள் அவசியம். 8 வழிச்சாலைகள்கு 7 சதவீத விவசாயிகள்தான் நிலத்தை தர மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பருவமழை பொய்த்ததால் தான் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. வறட்சியை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: