தேவாரம் மலையடிவார சாலைகளில் ஏலக்காய், பட்டை, அரிசி அன்றாடம் கடத்தல்

உத்தமபாளையம் : தேவாரம் மலையடிவார வனப்பாதை வழியே ஏலக்காய், பட்டை, அரிசி உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டும் வனத்துறையினர் கண்டும், காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டது தேவாரம், சாக்குலூத்து, சதுரங்கப்பாறை. இந்த வனப்பாதைகள் கேரளாவை இணைக்கும் பாதைகளாக உள்ளன. இப்பாதையை வனத்துறையினர் மிக தீவிரமாக கண்காணிப்பது மிக அவசியம்.

ஆனால் வனத்துறையினர் ரோந்து, மரங்களை வெட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இதனால் கேரளாவை இணைக்க கூடிய பாதைகள் கடத்தல் பாதைகளாக மாறிவருகின்றன. கேரளாவில் இருந்து தினந்தோறும் ஏலக்காய் கடத்தல் நடக்கிறது. வரிஏய்ப்பு செய்து கடத்தும் ஏலக்காய் தலைச்சுமையாக கடத்திவரப்பட்ட பின்பு மீண்டும் மலையடிவாரத்தில் இருந்து ஜீப்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதேபோல் ரேஷன் அரிசியும் தலைச்சுமையாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. குறைந்த விலைக்கு வாங்கி அதிகவிலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக கடத்தப்படுகின்றன. கடத்தல் நடப்பது தெரிந்தும் இதனை வனத்துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உத்தமபாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரிவாள் தீட்டிப்பாறை, சாக்குலூத்து, சதுரங்கப்பாறை, உள்ளிட்ட பல்வேறு ஒற்றையடி மலைப்பாதை வழியே அதிக அளவில் கடத்தல் நடக்கிறது. இங்கு வெளிநபர்கள் நடமாட்டமும் இருக்கிறது. இதனைத் தடுக்கவேண்டிய வனத்துறை மவுனம் காக்கின்றனர். என்றனர்.

Related Stories: