முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, அவர் பெயர் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா  முழுவதும் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கமல் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அத்துடன் கமல் மீது திருச்சி மற்றும் அவரைக்குறிச்சி காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர்  சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் , திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் கடந்த  15-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேள்வி எழுப்பி, வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து கமல் இந்து  மதத்தை புண்படுத்தும் வகையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலும் பேசி வருகிறார்.

அரவக்குறிச்சியில் பேசியது மட்டுமின்றி கடந்த 15-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் பேசிய போதும், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை, கோட்சே இந்து தீவிரவாதிதான் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் இந்து மதத்தை புண்படுத்தி  வருவதால் கமல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை  விடுத்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் சரவணனின் மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

முன்னதாக, முன்ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே  பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த  நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 16-ம் தேதி ஒத்திவைத்தார். இந்நிலையில், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆஜராகி ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும்  எனக்கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

Related Stories: