உடன்பிறந்த தங்கையாக கருதி பசுவுக்கு வளைகாப்பு நடத்திய சகோதரர்கள்

வேலூர் : தங்கள் குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் பிள்ளையாக கருதி வளர்த்த பசுவுக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பிகள் ஹிட்லர், குமார். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாட்டு பசுங்கன்றை வாங்கினர். அவ்வாறு வாங்கும் போது சகோதரர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால், தங்களுடன் பிறந்த தங்கையாக இந்த கன்றை கருதி ‘ஒன் மேன் ஆர்மி’ என்ற பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

தற்போது இந்த கன்று 9 மாத சினையாக உள்ளது. இந்நிலையில் தங்கள் குடும்பத்தில் தங்கள் தங்கையாக, மூத்த மகளாக கருதி வளர்த்து வந்த பசுவுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்படுவது போல் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று தங்கள் வீட்டின் முன்பு பந்தல் போட்டு வாழையிலை தோரணங்கள் கட்டி, பேனர்கள் வைத்து ஊர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் சினையாக இருந்த ஒன் மேன் ஆர்மி பசுவுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பந்தலின் கீழ் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து குடும்ப பெண்கள், வண்டறந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நலங்கு வைத்து சடங்குகளை செய்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு பிரியாணி விருந்து நடந்தது. தாங்கள் வளர்த்த பசுவை தங்கள் உடன் பிறந்த தங்கையாக கருதி பாசம் காட்டி வளைகாப்பு நடத்திய சகோதர்களை ஊர் மக்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினர். இதுதொடர்பாக வளைகாப்பு நடத்திய சகோதரர்கள் 3 பேரில் இளையவரான குமார் கூறியதாவது: இதனை பிறந்த கன்று குட்டியாக அப்போதே ₹60 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்தோம். கன்று குட்டியாகவே வந்ததால் எங்களுடன் பிறந்த தங்கையாகவே கருதி பாசமுடன் வளர்த்து வருகிறோம். நாங்கள் வளர்க்கும் கால்நடைகளை வளர்ந்த பின் விற்று விடுவோம். ஆனால் இதனை விற்கவில்லை.

அதேநேரத்தில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்று வந்துள்ளது ஒன் மேன் ஆர்மி. இதன் மூலம் எங்களுக்கு ரொக்கப்பரிசாக மட்டும் ₹8 லட்சம் வரை பெற்று தந்து உள்ளது. அவளுக்கு வளைகாப்பு நடத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: