பவுர்ணமி நிறைவடைந்ததும் கிரிவலப் பாதையில் துப்புரவு பணி தீவிரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி நிறைவடைந்ததையடுத்து, கிரிவலப் பாதையில் உள்ள குப்பைக்கழிவுகளை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.  அவ்வாறு கிரிவலம் செல்லும் பக்தர்கள் வீசிச்செல்லும் குப்பைக்கழிவுகளால் கிரிவலப் பாதையில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், உணவுகள் ஆங்காங்கே  கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசத்தொடங்குகிறது.

இதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் முடிந்த பின்னர், கிரிவலப் பாதையில் உள்ள குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்றும் பணியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் தொடங்கிய பவுர்ணமி, நேற்று அதிகாலையுடன் நிறைவடைந்தது.

அதையொட்டி, பக்தர்கள் கிரிவலப் பாதையில் வீசிவிட்டு சென்ற குப்பைக்கழிவுகளை அகற்றும் பணி, நேற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றது. அதன்படி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் குப்பைக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் முடிந்து கிரிவலப் பாதை உடனடியாக தூய்மைப்படுத்தி பிளிச்சிங் பவுடர் தூவப்படுவதால், தூய்மையாகவும், சுகாதாரமாகவும் காணப்படுகிறது.

Related Stories: