×

இறுதி கட்ட தேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு..

லக்னோ : உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. பீகாரில் 8, இமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, சண்டிகரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது.

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் பெட்ரோல் குண்டுவீச்சால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் தேர்தல் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பான்ஸ்கோன் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு அரசு அதிகாரிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் இமாச்சல் மாநிலத்தின் தேர்தல் பணியில் மேற்கொண்ட வினீத்குமார், தேவிசிங் மற்றும் லாட்ராம் ஆகிய மூன்று அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தலா ரூ.15 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் சார்பிலும் தலா ரூ. 15 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : phase , Five government employees , poll duty die ,Himachal Pradesh ,uttar pradesh
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...