சுற்றுலா பயணிகள் வாகனங்களால் ஊட்டி நகரம் ‘ஸ்தம்பித்தது’

ஊட்டி : மலர்  கண்காட்சியை முன்னிட்டு நேற்று ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளின்  வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து  ‘ஸ்தம்பித்தது’. ஊட்டியில் 17ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் மலர்  கண்காட்சி நடக்கிறது. இதனை காண வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில்  இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம்,  வேன் மற்றும் தனியார் பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரிக்கு அதிகளவு  வாகனங்கள் வந்த நிலையில் மலர் கண்காட்சியை காண ஊட்டி நகருக்குள் ஏராளமானோர்  தங்களது வாகனங்களில் நகருக்குள வந்தனர். சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலகம்,  மைசூர் சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, கமர்சியல் சாலை மற்றும்  பூங்கா சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அனைத்து இடங்களிலும்,  வாகனங்கள் சங்கிலி போல் ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டிக் கொண்டு சென்றதால், பல  இடங்ளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 இதனால் நேற்று  கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உட்பட பல உள்ளூர்  பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை  ஏற்பட்டது. இந்த போக்குவரத்தை சீரமைக்க வெளியூர்களில் இருந்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதும், வாகன  நெரிசலையும் சீரமைக்க போலீசார் தினறினர்.

அரசு பஸ்களின் மூலம் வரும்  சுற்றுலா பயணிகள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல ஏற்றவாறு ஊட்டி அரசு  போக்குவரத்து கழகத்தின் மூலம் 40க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் 5  நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டது. எனினும், அனைத்து பஸ்களிலும்  வெளியூர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

Related Stories: