தேச துரோக வழக்கு விசாரணை... சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்

சென்னை: தேச துரோக வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார்.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று வைகோ நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

வழக்கு விசாரணை :

இவ்வழக்கில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த வருடம் சென்னை 5வது செஷன்ஸ் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜரானார். அவரிடம் நீதிபதி, வைகோ மீதான குற்றம் குறித்து படித்துக்காட்டி குற்றச்சாட்டை பதிவு செய்தார். அதற்கு வைகோ, நான் இந்திய அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தது உண்மைதான். ஆனால், நான் குற்றவாளி அல்ல  என நீதிபதியிடம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார்.

வைகோ பேட்டி :

தேச துரோக வழக்கு விசாரணைகாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது; மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது; 2004-ல் கருத்துக்கணிப்பு படி தேர்தல் முடிவு அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: