×

அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய நீங்கள் யார்?: ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வேண்டும்...கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆவேச பேச்சு

பெங்களூரு: அரசியல்வாதிகள் என்ன உங்களுக்கு கார்டூன் சித்திரம் போல தோன்றுகிறதா என கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆவேசமாகக் கூறியுள்ளார். நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில்  வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதற்கிடையே, மைசூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக  முதல்வர் குமாரசாமி, சில சேனல்கள் மற்றும் இணையதளங்கள் அரசியல்வாதிகளை நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன என்றும் மீடியாவை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்த நீங்கள் (மீடியா) யார்? எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல  தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? எங்களை சிறுமைப்படுத்த நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையுமில்லை. எலெக்ட்ரானிக் மீடியாவில், வரும்  சில கதைகளை படித்தால் தூக்கம் போய்விடும். அதனால் அதைக் கண்டுகொள்வதில்லை என்று கோபமாகப் பேசினார். பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் தனது அரசு கவிழ்ந்துவிடும் என ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என கூறிய முதல்வர் குமாரசாமி , காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தியின் ஆதரவுடன் தமது தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படும் என குறிப்பிட்டார். ஊடகங்களின் தயவால் தான் ஆட்சியில் இருக்கவில்லை என்றும், கர்நாடகாவின் ஆறரை கோடி மக்களே தனது அரசுக்கு ஆதாரம்  என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

Tags : Coomaraswamy ,Karnataka , Politicians, kundal, media, the chief minister of Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...