மத்திய அரசின் ரூ.1,020 கோடி சிறப்பு திட்டம் மதுரையில் தடுமாறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்?

* பூமிபூஜையுடன் நிற்குது பெரியார் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு

* மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிய பணிகளிலும் குளறுபடி

மதுரை : மத்திய அரசின் சிறப்பு திட்டமான ரூ.1,020 கோடி மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடருமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. பூமி பூஜையுடன் பெரியார் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு புதைந்து கிடக்கிறது, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய பணிகள் குளறுபடியாகி நிற்கின்றன. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் 2015ல் மத்திய அரசின் சிறப்பு திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகர்)’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை, திண்டுக்கல் உள்பட 13 மாநகரங்கள் சேர்க்கப்பட்டன. திண்டுக்கலுக்கு நிதியே ஒதுக்கப்படவில்லை. மதுரைக்கு ரூ.1,020 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.356 கோடி திட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரியில் பூமிபூஜை நடத்தி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரூ.160 கோடியில் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மறு சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டு 4 மாதங்களாகின்றன. கட்டுமான பணிக்கு மண் தோண்டும் பணி கூட இன்னும் முடியவில்லை. இதனால் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுகின்றன. வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்க கூட இடமின்றி மக்கள் திண்டாடுகிறார்கள்.

* மீனாட்சி அம்மன் கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் ரூ.40 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டும் பணிக்காக அண்டர் கிரவுண்ட் தோண்டப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஏற்படும் மண் சரிவினால் அங்குள்ள கட்டிடங்களுக்கும், கோயில் கோபுர அஸ்திவாரத்திற்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

* புது மண்டபத்தை புனரமைக்க கோயில் அருகே பழைய குன்னத்தூர் சத்திரத்தில் வணிக வளாகம் கட்டும்பணி தொடங்கவில்லை. இன்னும் பல்வேறு புராதன சின்னங்கள் புனரமைப்பு பணிகளும் புதையுண்டு கிடக்கின்றன. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டிடங்களுக்கு உயர கட்டுப்பாடும், அண்டர்கிரவுண்ட் தோண்டவும் விதிமுறைகள் உள்ளன. இதை மீறி ஸ்மார்ட் சிட்டியில் கட்டும் கட்டிடங்களுக்கும், அண்டர் கிரவுண்டுக்கும் அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

பெரும்பாலான பணிகள் ஆரம்பம் ஆகாத நிலையில், இந்த சிறப்பு திட்டத்தை உருவாக்கிய மத்திய அரசின் பதவிகால ஆயுள் முடிகிறது. மே 23ல் தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த சிறப்பு திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்து சிக்கலை உருவாக்கி உள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. ஏனென்றால் 2009- 2014 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் நேரு நகர்புற மேம்பாட்டு திட்டம் அமலாக்கப்பட்டது. அதில் மத்திய அரசு அனுமதித்த ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் நிறைவேறின. அதன் பிறகு பாஜ ஆட்சி அமைந்ததும் நேருநகர்புற மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் இல்லா நகரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை நகருக்கு முக்கிய தேவையாக கருதப்படும் திட்டங்கள் சேர்க்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. ஏனென்றால் நிலத்தடி நீரை வேகமாக இழந்து தண்ணீரில்லா நகரங்களின் பட்டியலில் மதுரை முந்தி நிற்கிறது. நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் வண்டியூர், மாடக்குளம் உள்ளிட்ட கண்மாய்களை தூர்வாரி மழை காலங்களில் தண்ணீரை சேமிக்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் தீராத தலைவலியாக நீடிக்கும் போக்குவரத்து நெருக்கடி தீர்க்க ஸ்மார்ட் சிட்டியில் வழி காணப்படவில்லை.

Related Stories: